அறுவை சிகிச்சை இல்லாமல் ‘டாவி’ (TAVI) மற்றும் வயரில்லாத இரட்டை அறை பேஸ்மேக்கர்இதய சிகிச்சை! – எம்.ஜி.எம் மலர் மருத்துவமனை சாதனை
அடையாறில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனை, இதய வால்வு குறைபாட்டிற்குச் சிகிச்சையளிக்கும் ‘டாவி’ (TAVI) முறையையும், இதயத் துடிப்பைச் சீராக்கும் வயர் இல்லாத இரட்டை அறை பேஸ்மேக்கர் (Dual Chamber Leadless Pacemaker) பொருத்தும் முறையையும் ஒரே நோயாளிக்கு வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. முழுமையாகக் கதீட்டர் முறையில் செய்யப்பட்ட இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை, இந்தியாவில் நிகழ்த்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் திறந்தநிலை அறுவை சிகிச்சையின் அவசியம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 75 வயது மூதாட்டி ஒருவருக்கு, கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு அன்றாடச் செயல்பாடுகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. கடந்த மூன்று மாதங்களில் மூன்று முறை அவருக்குச் சுயநினைவு இழப்பு ஏற்பட்டது. சிடி அயோர்டோகிராம் (பெருநாடி வரைபடம்) உள்ளிட்ட முழுமையான பரிசோதனைகளில், அவரது இதயத்தின் முக்கிய வால்வு கடுமையாகச் சுருங்கியிருப்பதும், இதயத்தின் மின்துடிப்பு கடத்தப்படுவதைப் பாதிக்கும் ‘2:1 ஏவி பிளாக்’ என்ற கோளாறு இருப்பதும் கண்டறியப்பட்டது. முதிய வயது மற்றும் முந்தைய அறுவை சிகிச்சை ஆகிய காரணங்களால், இந்த இரண்டு சிக்கல்களுக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சையளிப்பது அதிக உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய சவாலாக இருந்தது.
நோயின் தீவிரம் மற்றும் அறுவை சிகிச்சையிலுள்ள அதிக ஆபத்தைக் கருத்தில் கொண்டு, முதுநிலை இடையீட்டு இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் மதன் மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், திறந்தநிலை இதய அறுவை சிகிச்சைக்குப் பதிலாக, முழுமையாகக் கதீட்டர் மூலம் தோலின் வழியே செய்யப்படும் தழும்புகளற்ற நுண்துளை சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுத்தனர்.
இதன்படி, பாதிக்கப்பட்ட இதய வால்வை மாற்றுவதற்காக முதலில் ‘டாவி’ (TAVI) சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, வயர் இல்லாத இரட்டை அறை பேஸ்மேக்கர் (Dual Chamber Leadless Pacemaker) கருவி பொருத்தப்பட்டது. மாத்திரை அளவிலான இரண்டு சிறிய கருவிகள் நேரடியாக இதய அறைகளுக்குள் பொருத்தப்பட்டன. வழக்கமான பேஸ்மேக்கர்களைப் போல, இதற்கென தனி அறுவை சிகிச்சையோ, வயர்களோ தேவையில்லை. இந்தக் கருவிகள் தங்களுக்குள் வயர் இல்லாமல் தகவல்களைப் பரிமாறிக்கொண்டு இதயத் துடிப்பைச் சீராகப் பராமரிக்கின்றன.
திறந்தநிலை அறுவை சிகிச்சை இன்றி, காலில் உள்ள இரத்தக் குழாய் வழியாகவே இந்த இரண்டு செயல்முறைகளும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டன. இந்த நவீன சிகிச்சை முறையின் மூலம், நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் அதிக நாட்கள் தங்குவதும், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயமும் பெருமளவு குறைக்கப்படுகிறது. சிகிச்சைக்குப் பிறகு 48 மணி நேரத்திற்குள் நோயாளி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இச்சாதனை குறித்து டாக்டர் மதன் மோகன் கூறுகையில், “டாவி (TAVI) மற்றும் வயர் இல்லாத இரட்டை அறை பேஸ்மேக்கர் (Dual Chamber Leadless Pacemaker) ஆகிய இரண்டு செயல்முறைகளையும் ஒரே நோயாளிக்கு ஒருங்கிணைத்துச் செய்திருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. அறுவை சிகிச்சை இல்லாத இதய மருத்துவத்தில் இது ஒரு புதிய மைல்கல்லாகும். அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு, முழுமையாகக் கதீட்டர் மற்றும் கருவிகள் மூலம் செய்யப்படும் சிகிச்சைகளை நோக்கி மருத்துவத்துறை வேகமாக மாறி வருவதையே இது உணர்த்துகிறது,” என்றார்.
எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மலர், அடையார், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் வியூக முயற்சிகளுக்கான துணைத் தலைவர் திரு. வேணுகோபால் பட் கூறுகையில், “சிக்கலான இதய நோய்களைத் துல்லியமாகவும், பாதுகாப்பாகவும், தழும்புகளுமின்றியும் குணப்படுத்தும் நவீன இதய சிகிச்சையின் எதிர்காலத்தை இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது. அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை முறை பெரும் நம்பிக்கையை அளிக்கிறது,” என்றார்.
