த.வெ.க.வுக்கு ஆதரவு என்ற தகவல் முற்றிலும் தவறானது – அதிமுக மறுப்பு
சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம் பரபரப்பான சூழலில் இன்று நடைபெற்றது.
அண்மையில் நடந்த தேர்தலில் 108 இடங்களைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சி ஆட்சி அமைக்க இன்னும் 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது;
இந்த இக்கட்டான நிலையில் அ.தி.மு.க. ஆதரவு அளிக்கலாம் எனப் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, த.வெ.க.வுக்கு ஆதரவு என்ற தகவல் முற்றிலும் தவறானது என்றும், இது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கவே இல்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தார்.
எந்த சூழலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை என்று எடப்பாடியார் அனுமதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
