Tamilசெய்திகள்

காவல்துறையை அதிநவீனமயமாக்க ரூ.212.58 கோடி நிதி ஒதுக்கீடு! – தமிழக அரசு அனுமதி

தமிழ்நாடு காவல்துறையை அதிநவீன சாதனங்கள், நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் நவீனமயமாக்க ரூ. 212.58 கோடி நிதி ஒதுக்கீட்டிற்குத் தமிழக அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இந்த நவீனமயமாக்கல் திட்டத்தின்க கீழ், தொடர்பு சாதனங்களுக்காக ரூ. 99.03 கோடியும், அவசரக்கால உதவி வாகனங்களுக்காக ரூ. 55 கோடியும், கண்காணிப்புச் சாதனங்களுக்காக ரூ. 30.51 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு ரூ. 13.43 கோடியும், பாதுகாப்பு உபகரணங்களுக்கு ரூ. 11.28 கோடியும், நவீன ஆயுதங்கள் கொள்முதலுக்கு ரூ. 3.33 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,000 VHF கையடக்க ரேடியோக்கள், 4G/5G வாக்கி டாக்கிகள், டிஜிட்டல் மொபைல் ரேடியோ அமைப்புகள் மற்றும் அவசர உதவிக்கான (ERSS) 500 நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்குக் திட்டமிடப்பட்டுள்ளது.

குற்றப்பிரிவு சிஐடி (Crime Branch CID) பயன்பாட்டிற்காக 22 நடமாடும் விசாரணை வாகனங்கள், தர்மல் மற்றும் இன்ஃப்ராரெட் கேமராக்கள் கொண்ட கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அத்துடன் க்ளாக் 17 பிஸ்டல்கள், 7.62 மிமீ தாக்குதல் துப்பாக்கிகள், இன்சாஸ் துப்பாக்கிகள், இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள், இரவு நேரப் பார்வையுடன் கூடிய ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மற்றும் கிரனேட் லாஞ்சர்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களும் காவல்துறையினருக்கு வழங்கப்பட உள்ளன.

மத்திய அரசின் காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 60% மத்திய நிதியுடனும் 40% மாநில நிதியுடனும் இந்த மேம்பாட்டுப் பணிகள் விரைவாகச் செயல்படுத்தப்பட உள்ளன.