பணி நீக்கங்கள், குடியேற்றச் சிக்கல் எதிரொலி! – அமெரிக்காவை விட்டு வெளியேறும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள்
அமெரிக்காவில் நிலவும் பணி நீக்கங்கள், குடியேற்றச் சிக்கல்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாக இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் அமெரிக்கக் கனவைக் கைவிட்டு தாய்நாட்டிற்குத் திரும்பி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எச்-1பி (H-1B) விசாவில் வசிக்கும் இந்தியத் தொழில்நுட்ப ஊழியர்கள், கிரீன் கார்டுக்கான ஐ-140 (I-140) மனுக்கள் நிராகரிக்கப்படுவதாலும், கடும் பணிப் பாதுகாப்பு இன்மையாலும் உடனடியாகத் தங்கள் உடைமைகளைத் தூக்கிக்கொண்டு இரவோடு இரவாக இந்தியாவுக்குத் திரும்புகின்றனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ், செலினா, பிரிஸ்கோ, பிராஸ்பர் மற்றும் கலிபோர்னியா போன்ற பகுதிகளில் வசித்து வந்த பல இந்தியர்கள் தங்களுடைய வீடுகள், கார்கள் மற்றும் சொத்துக்களை அப்படியே விட்டும் கைவிட்டும் செல்கின்றனர். குறிப்பாக, அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் 4 சதவீதத்திலிருந்து சுமார் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாலும், கடுமையான பணவீக்கம் மற்றும் குடியேற்றப் பிடிப்புகளாலும் அங்குள்ள சொத்துகளை விற்றுவிட்டுத் திரும்புவதே சிறந்த வழி என்று பலரும் கருதுகின்றனர்.
அமெரிக்காவில் வீடுகளின் தவணைத் தொகையைக் கட்ட முடியாமல் தவிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி நாடு முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபோர்குளோசர் (Foreclosure) எனப்படும் சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.
