Tamilசெய்திகள்

பெண் காவலர்களுக்கு தனிப்பட்ட கழிப்பறை, சானிட்டரி நாப்கின் விநியோக இயந்திரங்கள் அமைக்க வேண்டும் – டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

டெல்லி முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் பெண் காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தனிப்பட்ட கழிப்பறை வசதிகள் மற்றும் சானிட்டரி நாப்கின் விநியோக இயந்திரங்களை (Vending machines) உடனடியாக அமைக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘ஜஸ்டிஸ் ஃபார் ரைட்ஸ் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு, டெல்லி காவல் ஆணையர் 6 வாரங்களுக்குள் அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது.

ஆயிரக்கணக்கான பெண் காவலர்கள் பணியாற்றும் நிலையில், இத்தகைய சுகாதார வசதிகளை வழங்கத் தவறுவது அவர்களின் கண்ணியம், ஆரோக்கியம் மற்றும் அரசியலமைப்பு வழங்கியுள்ள பணிபுரிவதற்கான அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் செப்டம்பர் 23-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.