Tamilசெய்திகள்

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் நிலை-II மார்பக புற்றுநோய்க்கு வெற்றிகர உள் கதிர்வீச்சு சிகிச்சை

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட், 54 வயதான பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை-II மார்பக புற்றுநோயை வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளது. மார்பகத்தின் பால் நாளங்களில் தொடங்கும் இந்தப் புற்றுநோயைக் குணப்படுத்த, முதலில் அறுவைசிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. பின்னர், எஞ்சியிருக்கும் நுண்ணிய புற்றுநோய் செல்களை அழித்து, நோய் மீண்டும் வருவதைத் தடுக்க ‘பிராக்கிதெரபி’ எனப்படும் உள் கதிர்வீச்சு சிகிச்சை முறையை அளித்துள்ளனர்.

பிராக்கிதெரபி என்பது ஒரு மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை முறையாகும். இதில், கட்டி அகற்றப்பட்ட பகுதிக்குள் கதீட்டர் எனப்படும் மெல்லிய குழாய்கள் செலுத்தப்பட்டு, அந்த குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் கதிர்வீச்சு மிகத் துல்லியமாக வழங்கப்படுகிறது. இந்தப் பெண் நோயாளிக்கு, மார்பகத்தில் ஐந்து மெல்லிய குழாய்கள் பொருத்தப்பட்டு, இரண்டு நாட்களில் நான்கு அமர்வுகளாக கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த முறையில் கதிர்வீச்சு நேரடியாகப் புற்றுநோய்க் கட்டி இருந்த இடத்திற்கு மட்டும் செலுத்தப்படுவதால், அதனைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு கதிர்வீச்சின் பாதிப்பு வெகுவாகக் குறைக்கப்படுகிறது. மேலும், மார்பகம் மற்றும் அருகிலுள்ள முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரலுக்கு ஏற்படும் கதிர்வீச்சு பாதிப்புகள் பெருமளவு தவிர்க்கப்படுகின்றன. சாதாரண கதிர்வீச்சு சிகிச்சை முறையில், ஏற்படும் தோல் நிறம் மாறுதல், வடுக்கள் ஏற்படுதல் மற்றும் திசுக்கள் கடினமாதல் போன்ற பக்கவிளைவுகளைத் தடுக்கிறது. நிலை I மார்பக புற்றுநோயில் 1–2% மற்றும் நிலை II மார்பக புற்றுநோயில் 2–5% என்ற அளவில் மட்டுமே புற்றுநோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதே இந்த சிகிச்சையின் சிறப்பம்சமாகும்.

இந்த வெற்றிகரமான சிகிச்சையை, புற்றுநோய் அறுவைசிகிச்சை முதுநிலை நிபுணர் டாக்டர் சிவகுமார் மகாலிங்கம் மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் முதுநிலை நிபுணர் டாக்டர் அலெக்ஸ் ஏ. பிரசாத் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர்.

டாக்டர் அலெக்ஸ் ஏ. பிரசாத் கூறுகையில், “பிராக்கிதெரபி மூலம் கதிர்வீச்சு மிகவும் துல்லியமாகச் செலுத்தப்படுவதால், சுற்றியுள்ள மற்ற உறுப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படுவது கணிசமாகக் குறைக்கப்படுகிறது. இது சாதாரண கதிர்வீச்சு சிகிச்சையால் ஏற்படும் தோல் உரிதல், நிறம் மாற்றம், இழைமப் பெருக்கம் மற்றும் வடுக்கள் ஏற்படுவது போன்ற பக்கவிளைவுகளைக் குறைக்கிறது,” என்றார்.

டாக்டர் சிவகுமார் மகாலிங்கம் கூறுகையில், “அறுவைசிகிச்சை மூலம் கட்டியை அகற்றிய பிறகு, எஞ்சியிருக்கக் கூடிய நுண்ணிய செல்களை அழிக்கவே இந்த பிராக்கிதெரபி சிகிச்சையை நாங்கள் வழங்கினோம். மார்பகத்தை அகற்றாமல் தக்கவைப்பதோடு, இதயம் மற்றும் நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்குக் கதிர்வீச்சின் வெளிப்பாட்டால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதே இச்சிகிச்சையின் முதன்மையான பலனாகும்; ஆகவே நோயாளிக்கும் சிறப்பான சிகிச்சை விளைவு கிடைப்பதற்கும் மற்றும் திறன்மிக்க செயல்முறைகளுக்கும் பல்வேறு துறைகளின் நிபுணர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிற குழு அணுகுமுறை இன்றியமையாதது” என்று தெரிவித்தார்.

மருத்துவ புற்றுநோயியல் துறையின் இயக்குனரும் மற்றும் முதுநிலை நிபுணருமான டாக்டர் எம். ஏ. ராஜா பேசுகையில், “மார்பகத்தை அகற்றாமல் தக்கவைக்கும் சிகிச்சை என்பது, கட்டியை அகற்றுவது மட்டுமல்ல; வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதாக இந்த சிகிச்சை முறை இப்போது மாறியிருக்கிறது. பிராக்கிதெரபி சிகிச்சையானது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் கட்டி இருந்த இடத்தை துல்லியமாக கதிர்வீச்சு மூலம் குறிவைத்து, எஞ்சியிருக்கும் புற்றுசெல்களை அழிக்க வகை செய்கிறது. அத்துடன், இது இதயம், நுரையீரல்கள் மற்றும் தோல்கள் மீது வெளிப்படும் கதிர்வீச்சை கணிசமாகக் குறைக்கிறது. இந்த துல்லிய சிகிச்சை அணுகுமுறையால், நோயாளிகள் நம்பிக்கையுடன் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு உதவுவதுடன், அதே வேளையில் நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த பலனையும் அளிக்கிறது.” என்றார்.