Tamilசெய்திகள்

மதுபானங்களை இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய டாஸ்மாக்!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் (TASMAC) மதுபான விற்பனையை நவீனமயமாக்கி முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான மதுபானங்களை இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கடைகளில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள tasmace2e.in (tasmac.tn.gov.in) என்ற புதிய இணையதளப் போர்ட்டலில், 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் வயது விவரத்தை உறுதிசெய்து உள்நுழைந்து, 5 கி.மீ முதல் 25 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் இருக்கும் மதுபானக் கையிருப்பு (live inventory) விவரங்களை நேரடியாகச் சரிபார்க்க முடியும்.

இதன் மூலம் டிஜிட்டல் முறையில் கட்டணத்தைச் செலுத்திப் பெறப்படும் கியூஆர் கோடை (QR Code) சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் காண்பித்து, கூடுதல் கட்டணமின்றி அரசு நிர்ணயித்த அதிகபட்ச விற்பனை விலையிலேயே (MRP) மதுபானங்களை வாங்கிக் கொள்ளலாம்.

ரெய்ல்டெல் (RailTel) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த இணையதளப் போர்ட்டல் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் செயல்படுவதோடு, குறிப்பிட்ட கடைக்குச் செல்வதற்கான வழித்தடத்தையும் கூகுள் மேப் மூலம் காட்டுகிறது. அதிகக் கட்டணம் வசூலிப்பது மற்றும் குறிப்பிட்ட பிராண்டுகளைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதைத் தடுக்கும் நோக்கில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.