Tamilசெய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதிவரை நடைபெற்றது. அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மாதம் தமிழக அரசின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.

சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம்.

இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறும் புதிய திட்டங்கள், அதற்கான செலவுகள், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களுக்கான தொடர் செலவுகள், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.