Tamilசெய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பில் எந்தவிதமான சமரசமும் இல்லை – ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு நேற்று சீனாவின் தியான்ஜின் நகரில் தொடங்கியது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ஈரான் அதிபர் மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் 2 பார்வையாளர்களாக உள்ள நாடுகள் மற்றும் 14 உரையாடல் நாடுகளின் தலைவர்களும் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். நேற்று மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தகம், எல்லை விவகாரம், வரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இரு நாட்டு உறவை வலுப்படுத்த அவர்கள் உறுதி அளித்தனர். அதே போல் நேற்றைய மாநாட்டில் பிரதமர் மோடி மேலும் சில நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2-வது மற்றும் கடைசி நாள் மாநாடு இன்று காலை தொடங்கியது. மாநாட்டு அரங்குக்கு வந்த தலைவர்களை சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்றார். இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் ஆகியோர் ஒன்றாக நடந்து சென்றனர்.அவர்களை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். அப்போதுமோடி, ஜின்பிங், புதின் ஆகியோர் சிறிது நேரம் உரையாடியானார்கள். அவர்கள் சிரித்தப்படி பேசி கொண்டிருந்தனர்.

பின்னர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுக்க சென்றனர். இதை தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் உறுப்பினர்கள் அமர்வு நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எதிர்கால கண்ணோட்டம் குறித்து பேசினர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது:-

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எங்களுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்ததற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்று உஸ்பெகிஸ்தானின் சுதந்திர தினம் ஆகும். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அமைப்பின் உறுப்பினராக இந்தியா மிகவும் நேர்மறையான பங்கைக் கொண்டுள்ளது. அமைப்பிற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கை 3 முமுக்கியமான தூண்களை அடிப்படையாகக் கொண்டது. பாதுகாப்பு, பரஸ்பர இணைப்பு, வாய்ப்பு ஆகியவை ஆகும்.

கடந்த 7 தசாப்தங்களாக இந்தியா பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான செயலை பார்த்தோம். இந்த தாக்குதல் பயங்கரவாதத்தின் அருவருப்பான வடிவம் ஆகும். இந்த துயர நேரத்தில் எங்களுடன் நின்ற நட்பு நாட்டிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை அடிப்படையாகும். ஆனால் இதற்கு பயங்கரவாதம், பிரிவினை வாதம், பயங்கரவாதம் பெரிய சவால்களாக உள்ளன. பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, அனைத்து மனிதகுலத்திற்கும் பொதுவான சவாலாகும். அதிலிருந்து எந்த நாடும், சமூகமும், குடிமகனும் தன்னைப் பாதுகாப்பாகக் கருத முடியாது. எனவே, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறது. கூட்டு தகவல் நடவடிக்கையை வழிநடத்துவதன் மூலம் அல்கொய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்துப் போராட இந்தியா முன்முயற்சி எடுத்தது.

பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராக நாங்கள் குரலை எழுப்பி வருகிறோம். அதில் உங்கள் ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதியை தடை செய்வதோடு அதன் மூலங்களை கண்டறிந்து களையெடுத்து வருகிறோம். ஆனால் சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவு அளித்து வருகின்றன. இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அது வேரறுக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதம் மீது சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது. பயங்கரவாத எதிர்ப்பில் எந்தவிதமான சமரசமும் இல்லை. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நாம் தெளிவாகக் கூற வேண்டும். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் நாம் ஒற்றுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். இது மனித குலத்திற்கான நமது பொறுப்பு ஆகும்.

வலுவான இணைப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வளர்ச்சி, நம்பிக்கைக்கான கதவுகளையும் திறக்கிறது என்று இந்தியா எப்போதும் நம்புகிறது. இதைக் கருத்தில் கொண்டு, சபாஹர் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் போன்ற முயற்சிகளில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

இது ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளுடனான இணைப்பை மேம்படுத்த உதவும். சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தைப் பின்பற்றி இந்தியா முன்னேறி வருகிறது. ஒவ்வொரு சவாலையும் ஒரு வாய்ப்பாக மாற்ற நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு பகுதியாக இருக்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். காலத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வளர்ச்சியடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்த, நாகரிக உரையாடல் மன்றம் ஒன்றை உருவாக்க முன்மொழிகிறேன். இது நமது பண்டைய நாகரிகம், கலாச்சாரம், மரபுகள் மற்றும் இலக்கியங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு உலகளாவிய பாதையை வழங்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.