Tamilசெய்திகள்

எங்கள் தயவில்தான் இந்த ஆட்சியே நடக்கிறது – சட்டமன்ற கூட்டத்தில் த.வெ.கவை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடிய தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு காரசாரமாகப் பேசினார்.

தவெக அரசு பொறுப்பேற்று 40 நாட்கள் நிறைவடைந்துள்ள சூழலில், ஆளுநர் உரையில் ஏதேனும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா என்று ஆவலுடன் காத்திருந்த தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகக் குறிப்பிட்ட அவர், இந்த உரை ‘ரீல்ஸ்’ கன்டென்ட்டிற்கு உதவுமே தவிர மக்களின் உண்மையான பிரச்னைகளுக்குத் தீர்வாகாது என விமர்சித்தார்.

அவையின் மரபுகளை மீறி இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டதைச் சுட்டிக்காட்டியவர், ஆளுங்கட்சிக்குத் தங்களின் கூட்டணி கட்சிகளின் வாக்குகளும், உடன்பிறப்புகளின் உழைப்பும் பின்னணியாக இருந்ததால், தங்களின் தயவில்தான் இந்த ஆட்சியே நடக்கிறது என்றும், அதனால் தங்களுக்கு இந்த அரசை விமர்சிக்க அதிக உரிமையும் பொறுப்பும் இருப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை நீட்டித்ததற்கும், மகளிர் உரிமைத் தொகையை வழங்கியதற்கும் நன்றி தெரிவித்த அதேவேளையில், கடந்த நான்கு ஆண்டுகளில் 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்த ‘நான் முதல்வன்’ திட்டத்தை முடக்க முயல்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பாராட்டிய மகளிர் சுயஉதவி குழுக்களின் சாதனை முந்தைய திமுக ஆட்சியில் நிகழ்ந்தது என்று குறிப்பிட்ட உதயநிதி, திரைப்படங்களில் ஐந்து நிமிடத்தில் பணக்காரராவது போல ஒரு மாதத்தில் எதையும் மாற்றிவிட முடியாது என்றும், தங்களின் சாதனைகள் மீது புதிய அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதாகவும் சாடினார். மேலும், அறநிலையத்துறை வருவாய் குறித்த ஆளுநர் உரையின் வரிகள், அறநிலையத்துறையே வேண்டாம் என்று கூறும் பாஜகவின் குரலாக இந்த அரசு ஒலிக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறியவர், சென்னை பெரம்பூர் தொகுதி முதல் ஒட்டுமொத்தத் தமிழ்நாடே கடுமையான மின்வெட்டால் இருளில் மூழ்கியிருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இறுதியாக, தவெக ஆட்சியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், குற்றச்சம்பவங்களைப் பார்க்கும்போது நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது உத்திரபிரதேசம் போன்ற வடமாநிலத்தில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுவதாகவும், பெரும்பாலான குற்றவாளிகள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதால் முதலமைச்சர் விஜய் உடனடியாக சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.