Tamilசெய்திகள்

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைக்கிறவங்களுக்கு நான் எப்பவுமே டேஞ்சர் தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மக்களுக்கு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

”வணக்கம், எல்லாரும் எப்படி இருக்கீங்க? தேர்தல் பிரச்சாரம் பரபரப்பா போயிட்டு இருக்கு. தமிழ்நாடு பூரா நான் மக்களைச் சந்தித்தாலும் இந்த வீடியோ மூலமா சில விஷயங்களை உங்ககிட்ட மனசு விட்டுப் பேசணும்னு நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நாள்ல எலக்சன் இந்த சமயத்துல எனக்கு ஒரு விஷயம் மைண்ட்ல வருது.

2021-ல் இதே மாதிரி ஒரு சட்டமன்றத் தேர்தல். அந்த சமயத்துல சில பேரு ‘ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தன் கருணாநிதி’ன்னு சொன்னாங்க. கலைஞர் கூட என்னை எப்பவுமே ஒப்பிட முடியாது. அவரை நான் அப்பான்னு கூப்பிட்டதை விடத் தலைவர்ன்னு கூப்பிட்டதுதான் அதிகம். அப்படிப்பட்ட தலைவரை விட நான் மோர் டேஞ்சரஸ்ன்னு அவங்க சொல்லும்போது எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் தோணுச்சு. தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைக்கிறவங்களுக்கும் நம்மளோட வளர்ச்சியைத் தடுக்க நினைக்கிறவங்களுக்கும் நான் என்னைக்குமே டேஞ்சர்தான். இதுல தலைவர் கலைஞரை விட ஒரு படி மேலே இருக்கேன்னா அது எனக்குப் பெருமைதானே? ஏன்னா இதெல்லாம் நம்ம தமிழர்களுடைய பிளட்லயே இருக்கு.

என் மேல நம்பிக்கை வச்சு நீங்க என்னை சி.எம் ஆக்கி அஞ்சு வருஷம் ஆச்சு. ‘ஸ்டாலின் சார் சி.எம் ஆனது எல்லாம் ஓகே, இந்த அஞ்சு வருஷத்துல மக்களுக்கு என்ன பண்ணியிருக்கீங்க?’ அப்படின்னு யாராவது கேட்டா நம்மால மணிக்கணக்கா, ஏன் நாட்கணக்கா கூடப் பேச முடியும். முக்கியமா எப்பவுமே தமிழ்நாட்டை வஞ்சிக்கிற ஒன்றிய அரசு எதிர்த்துத் தமிழ் மக்களுக்காகச் சண்டை செஞ்சிருக்கிறதை இன்னும் பெருமையாக என்னால சொல்லிக்க முடியும்.

சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சிங்கிறதுதான் நம்முடைய முதன்மையான குறிக்கோள். அந்த வகையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பேருந்து பயணம், தோழி மகளிர் விடுதி, மக்களைத் தேடி மருத்துவம்னு, கருவுல இருக்கிற குழந்தையில இருந்து வயது முதிர்ந்த மூத்த குடிமக்கள் வரைக்கும் எல்லாரும் பயனடையிற மாதிரி நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்தோம்.

காலை உணவுத் திட்டம், லேப்டாப், அரசுப் பள்ளியில படிச்ச மாணவ மாணவிகளுக்கு மாசம் 1000 ரூபாய் உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம்னு கல்விக்காக மட்டும் இந்த ஆட்சியில் அவ்வளவு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். நீங்க எந்த டேட்டாவ வேணாலும் எடுத்துப் பாருங்க; தொழில்துறை, விவசாயம், கல்வினு எல்லாத் துறையிலயும் தமிழ்நாடு டாப்ல இருக்கும். அதுக்கு அடையாளமாக 14 வருஷத்துக்கு அப்புறம் தமிழ்நாட்டோட பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமா எந்த மாநிலமும் தொடாத இரட்டை இலக்கத்தைத் தொட்டிருக்கு. இன்னும் உயரம் தொடுவோம்ங்கிற உறுதியும் எனக்கு இருக்கு.

நம்ம உரிமையை, நம்ம உழைப்பை, நம்ம மக்களோட கலாச்சாரத்தை, நம்ம மொழியை அழிக்கணும்னு நினைக்கிறவங்களோ, அவங்களோட அடிமைகளோ நமக்கு வேணாம். இந்த வளர்ச்சியும் வளமான எதிர்காலமும் அடுத்த அஞ்சு வருஷம் தொடரணும். நான் உங்க அப்பாவா, அண்ணனா, தம்பியா, ஒரு தோழனா உங்ககிட்ட உரிமையோடு கேட்கிறேன் மீண்டும் இந்த நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்திலும், எங்களது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியின் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். நன்றி. வெல்வோம் ஒன்றாக” என்று பேசியுள்ளார்.