Tamilசெய்திகள்

திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை சூளையிலிருந்து புறப்பட்டு திருப்பதிக்குச் செல்லும் திருக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு, வாகன நெரிசலைத் தவிர்க்க சென்னை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பில் இன்று போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் வாகன இயக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாகனங்கள் ஈவெரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலை வழியாகத் திருப்பி விடப்படுகின்றன. மேலும் மாலை 3 மணி முதல் ஊர்வலம் யானைகவுனி பாலத்தைக் கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட், பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலை வழியாக இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஊர்வலம் யானைகவுனி பாலத்தை நெருங்கும்போது சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலாஸ் சாலை செல்லும் வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாகவும், மசூதி பாயிண்டில் இருந்து சூளை ரவுண்டானா செல்லும் வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகவும் திருப்பி விடப்படுகின்றன.

இது தவிர, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி சந்திப்பு ஆகியவற்றில் ஊர்வலம் நகர்வதற்கு ஏற்ப அவ்வப்போது போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளதுடன், ஊர்வலம் கொன்னூர் ஒன் பாயிண்ட் பகுதிக்கு வரும் வேளையில் ஓட்டேரி பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் குக்ஸ் சாலை வழியாகவும், ஐசிஎஃப் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் நியூ ஆவடி சாலை வழியாகவும், மேடவாக்கம் டேங்க் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் எம்.டி. சாலை மற்றும் வி.பி. காலனி சந்திப்பு வழியாகவும் மாற்றி விடப்படுகின்றன.