டிஜிட்டல் மயமான ஓட்டுநர் உரிமம் மற்றும் வானகப் பதிவுச் சான்றிதழ் வழங்கல்
தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் (Driving License) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (Registration Certificate – RC) வழங்கலில் போக்குவரத்துத் துறை ஒரு புரட்சிகரமான டிஜிட்டல் மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம், புதிய ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களுக்கான பிளாஸ்டிக் கார்டு அச்சிடுதல் மற்றும் தபால் மூலம் அனுப்பி வைக்கும் பழைய நடைமுறை இன்று முதல் முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.
இனி ஓட்டுநர் தேர்வு மற்றும் வாகனப் பதிவு பண முடிவடைந்த அன்றே, விண்ணப்பதாரர்கள் தங்களது டிஜிட்டல் ஆவணங்களை ஆன்லைன் வாயிலாக நேரடியாகப் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளும் புதிய வசதி அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கார்டுகள் அச்சிடப்பட்டு தபாலில் வருவதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல், உடனடியாக அச்சிடப்பட்ட காகித வடிவத்திலோ அல்லது மொபைல் போன் வாயிலாகவோ தங்களது சான்றிதழ்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களின் நேர விரையத்தைத் தவிர்ப்பதுடன், போக்குவரத்துத் துறையின் சேவைகளை மேலும் விரைவாகவும் எளிதாகவும் பெறப் பெரிதும் வழிவகுக்கும்.
