அமெரிக்காவின் FBI-ஆல் தேடப்பட்டு வந்த டாப் 10 பட்டியலில் உள்ள பெண் இந்தியாவில் கைது
அமெரிக்காவின் FBI-ஆல் தேடப்பட்டு வரும் டாப் 10 (Top 10 Most Wanted) பட்டியலில் இருந்த பெண், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய அதிகாரிகள் மற்றும் இன்டர்போல் ஒத்துழைப்புடன் FBI சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் (வயது 40) என்ற பெண்ணை, மகனை கொலை செய்து விட்டு விசாரணையின் இருந்து தப்பிக்க இந்தியாவுக்கு தப்பி வந்த நிலையில் கைது செய்துள்ளது.
சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் பற்றி தகவல் தெரிவித்தால் 2.5 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்க புலனாய்வு பிரிவு (FBI) தெரிவித்திருந்தது. சிண்டி ரோட்ரிக்ஸ் சிங்கிற்கு உடல்நலம் குன்றிய (மாற்றுத்திறனாளி) மகன் இருந்துள்ளான். இவனை 2022ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் இருந்து காணவில்லை. இது தொடர்பாக சிண்டி ரோட்ரிக்ஸிடம் கேட்டபோது, அவரது தந்தையுடன் (Biological father) மெக்சிகோவில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், 2023 மார்ச் மாதம் டெக்சாஸ் அதிகாரிகள் சிண்டி ரோட்ரிக்ஸ் கூறிய முகவரியில் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அங்கு இல்லை.
இதற்கிடையே சிண்டி அவரது கணவன் மற்றும் அந்த பையனின் இந்தியாவைச் சேர்ந்த வளர்ப்பு தந்தை மற்றும் 6 சிறுவர்கள் ஆகியோருடன் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். இந்தியாவுக்கு ஏறிய விமானத்தில் அந்த சிறுவன் இல்லை. இதனால் கொலை செய்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.
இந்த வழக்கில் 2023 அக்டோபர் மாதம் சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் மீது முறையாக குற்றம்சாட்டப்பட்டது. கடந்த வருடம் இன்டர்போல் ரெட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. சட்ட விசாரணையை தவிர்க்க சட்டவிரோதமாக வெளியேறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
