Tamilவிளையாட்டு

டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.21.5 கோடி பரிசு

நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன் குவித்தது.

சஞ்சு சாம்சன் 46 பந்தில் 89 ரன்னும் (5 பவுண்டரி, 8 சிக்சர்) , இஷான் கிஷன் 25 பந்தில் 54 ரன்னும் ( 4 பவுண்டரி, 4 சிக்சர்), அபிஷேக் சர்மா 21 பந்தில் 52 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) , ஷிவம் துபே 8 பந்தில் 26 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஜேம்ஸ் நீசம் 3 விக்கெட்டும், மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

256 ரன் இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 19 ஓவரில் 159 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 96 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது.

டிம் ஷெய்பெர்ட் அதிகபட்சமாக 26 பந்தில் 52 ரன்னும் ( 2 பவுண்டரி, 5 சிக்சர்) , கேப்டன் சான்ட்னெர் 35 பந்தில் 43 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பும்ரா 4 விக்கெட்டும், அக் ஷர்படேல் 3 விக்கெட்டும் ஹர்திக் பாண்ட்யா , வருண் சக்கரவர்த்தி, அபிஷேக் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்பு 2007, 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. மேலும் தொடர்ச்சியாக 2 முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் புரிந்தது. அதோடு போட்டியை நடத்திய நாடுகளில் முதல் தடவையாக கோப்பையை வென்ற நாடு எனவும் இந்தியா சாதித்தது.

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21.5 கோடி பரிசாக கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.10.75 கோடி வழங்கப்பட்டது. கடந்த முறை வழங்கப்பட்ட அதே பரிசு தொகை வழங்கப்பட்டது. அரை இறுதியில் தோல்வியை தழுவிய தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு தலா ரூ.6.30 கோடி கிடைத்தது. 5 முதல் 8-வது இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.2.48 கோடியும், 9 முதல் 12-வது இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.1.24 கோடியும், 13 முதல் 20-வது இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா ரூ.1.03 கோடியும் வழங்கப்பட்டன.

ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.28.64 லட்சம் பரிசாக கிடைத்தது. மொத்தம் ரூ.101 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டது.