Tamilசெய்திகள்

மாணவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு! – மெரினா கடற்கரை முழுமையாக மூடப்பட்டது

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET) தேர்வுக்கு எதிராக மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதாக வந்த உளவுத்துறை தகவலை அடுத்து, அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரை முழுமையாக மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடற்கரைக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் த தடுப்புகள் அமைக்கப்பட்டு, கலங்கரை விளக்கம் முதல் அண்ணா சதுக்கம் வரையிலான பகுதிகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடற்கரை மணற்பரப்பிற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மனித நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

முன்னதாக, நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், மெரினா கடற்கரையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கூட்டங்கள் கூடுவது மற்றும் போராட்டங்கள் நடத்துவதை முழுமையாகத் தடுக்கும் நோக்கிலேயே சென்னை மாநகரக் காவல் துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.