டெட்டனேட்டர், சிலிண்டர்கள் வெடித்து விபத்து! – 6 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம், கதிரி அடுத்த கும்மரவர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கண்ணா. இவரது சகோதரர் சம்பத். இவர்கள் குடும்பத்துடன் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். மேலும் இவர்கள் இருவரும் பாறைகளில் டெட்டனேட்டர்களை வெடிக்கச்செய்து கற்களை விற்பனை செய்து வந்தனர்.இதற்காக வீடுகளில் டெட்டனேட்டர்கள், அம்மோனியம் சல்பேட், டீசல் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருந்தனர்.
இந்த நிலையில், வெங்கண்ணா வீட்டில் பதுக்கி வைத்திருந்த டெட்டனேட்டர்கள் திடீரென வெடிக்க ஆரம்பித்தது. இதனால் வெங்கண்ணா, சம்பத் குடும்பத்தினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த டெட்டனேட்டர்களும், சிலிண்டர்களும் வெடித்ததால் வெங்கண்ணாவின் வீடு தரைமட்டமானது.
அப்போது தீயை அணைக்கும் பணியில் இருந்த 6 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 10 பேர் காயமடைந்தனர். அவர்களின் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர், போலீஸார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
