ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டி – சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பிவி சிந்து, உன்னதி ஹூடா, சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கிரெட்டி ஜோடி, தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜப்பான் ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் பி.வி.சிந்து.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதினார். இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் பெற்றவரான பிவி சிந்து கடந்த 2 ஆண்டாக சர்வதேச பட்டம் எதுவும் வெல்லாத நிலையில், தற்போது ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
