சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 410 பேருக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும் – பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) வெற்றி பெற்றுச் சான்றிதழ் சரிபார்ப்பையும் முடித்த 410 பேருக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர்களுக்கு வேலை வழங்க நீதிமன்றம் ஆணையிட்டும் கூட, முந்தைய திமுக அரசும் தற்போதைய தவெக அரசும் அதனைச் செயல்படுத்த மறுப்பது எளிய பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் பெரும் சமூக அநீதியாகும். கடந்த 2012-இல் ஆசிரியர் பணிக்குத் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு, அடுத்தடுத்து வந்த அரசுகள் தங்களின் கொள்கைகளை முன்னுக்குப் பின் முரணாக மாற்றியதே இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறக் காரணம்.
வெயிட்டேஜ் முறை மற்றும் 2018-இன் அரசாணை எண் 149 மூலம் கொண்டு வரப்பட்ட போட்டித் தேர்வு போன்ற அடுத்தடுத்த விதி மாற்றங்களால் இந்த 410 பேரின் வேலைவாய்ப்பு கானல் நீராகிப் போனது. இந்த இரட்டைத் தேர்வு முறையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் 2024-இல் உயர்நீதிமன்றம் சாதகமாகத் தீர்ப்பளித்த நிலையில், அதற்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்ற அரசு, அங்கே லோக் அதாலத் மூலம் கருணை அடிப்படையில் சமரசத் தீர்வு காணுமாறு அறிவுறுத்தப்பட்ட பிறகும், கடந்த ஜூலை 14-ஆம் தேதி நடந்த விசாரணையில் கோரிக்கைகளை நிராகரித்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறியிருப்பது ஏழை ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயலாகும்.
எனவே, நீதிமன்றங்களின் உத்தரவை மதித்து பாதிக்கப்பட்ட 410 பேருக்கும் உடனடியாகப் பணி நியமனம் வழங்குவதோடு, தகுதித் தேர்வு தேர்ச்சியாளர்களைப் பெருமளவில் பாதிக்கும் அரசாணை எண் 149-ஐயும் ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
