Tamilசெய்திகள்

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!

2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி, அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி உட்பட 7 பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஜூலை.28 அன்று வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி அவசர மனுத்தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு, அவரை காவலில் வைத்து விசாரணை செய்வது மிகவும் அவசியம் எனக்கூறி, நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்தத் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையிட்டனர். இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நாளை வழக்கின் விசாரணையை பட்டியலிட ஒப்புக்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தால் செந்தில்பாலாஜி கைதாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.