ஜம்மு காஷ்மீரின் சலால் அணையில் தண்ணீர் திறப்பு – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள சலால் நீர்மின் நிலையத்தின் சலால் அணையில் (Salal Dam) சேறு அகற்றும் பணிகளுக்காக (Silt Flushing) மதகுகள் திறக்கப்பட்டுள்ளதால், செனாப் ஆற்றில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து சீற்றத்துடன் பாய்ந்தோடுகிறது.
அணைக்கு மேலே மற்றும் கீழே உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் செனாப் ஆற்றின் நீர்வரத்து அதிகரித்தும், மாறுபட்டும் காணப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள், கால்நடைகளை மேய்க்கச் செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என சலால் நீர்மின் நிலைய நிர்வாகமும், ரியாசி மாவட்ட நிர்வாகமும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேலும், சூழ்நிலையைக் காவல்துறையும் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
