புதிய அரசியல் இயக்கம் தொடங்கும் டாக்டர்.ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி!
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸின் மூத்த மகளும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான ஸ்ரீகாந்தி, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து வரும் டிசம்பர் 6-ஆம் தேதி சென்னையில் புதிய அரசியல் இயக்கம் ஒன்றைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாமகவில் ஏற்பட்ட தந்தை – மகன் மோதல் மற்றும் அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், அவர் விட்டுச் சென்ற சமூகநீதிப் பாதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ஸ்ரீகாந்தி இந்தப் புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கவுள்ளார்.
சமத்துவம், சமூகநீதி மற்றும் சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டு, மக்களின் நலன் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு இந்த புதிய இயக்கம் கட்டமைக்கப்பட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு பாமகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த ஸ்ரீகாந்தியின் இந்த அதிரடி அரசியல் நகர்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
