தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நவம்பர் 30 முதல் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று (நவம்பர் 27) ஒப்புதல் அளித்துள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கையைச் சம விகிதத்தில் 50 சதவீதம் உயர்த்தவும், தற்போதைய இடஒதுக்கீடு விகிதத்தை 2051-ஆம் ஆண்டு வரை தொடரவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாகக் கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாக்கள் எதிர்ப்பு மற்றும் பின்னடைவு காரணமாகத் திரும்பப் பெறப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் புதிய வடிவில் இந்த மசோதா முன்னெடுக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் சூழலில், தொகுதி மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாகக் கட்சிகளிடையே விவாதங்களும் எதிர்ப்புகளும் வலுத்துள்ளன.
குறிப்பாகத் தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 சதவீத மக்களவைத் தொகுதிப் பங்கு எவ்விதக் குறைப்பும் இன்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், இதில் எந்த சமரசமும் கிடையாது எனவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்; தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் கூட்டாட்சித் தத்துவம் பாதிக்கப்படாத வகையில் வெளிப்படைத்தன்மையுடன் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் எனப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
