Tamilசெய்திகள்

அதானி குழுமத்தின் சிறந்த ஊழியருக்கான வாழ்நாள் விருது பெற்ற பிரதமர் மோடி – காங்கிரஸ் கிண்டல்

மகாரஷ்டிர மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் கடுமையான போக்குவரத்துச் சுமையைக் குறைக்க நவி மும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. குன்றுகளை தரைமட்டமாக்கி, ஆறுகளை மடைமாற்றிவிட்டு, நிலப்பரப்புகளை இணைக்க பாலங்கள் அமைத்து 1,160 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.19,650 கோடி செலவில் இந்த விமான நிலையத்தைக் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. அதானி ஏர்போர்ட்ஸ் மற்றும் பொது-தனியார் கூட்டு முயற்சியில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த விமான நிலையம் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தொழிலதிபர் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி அதானிக்கு ஷீல்ட் கொடுக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.

அந்த புகைப்படத்தில், மோடிக்கு அதானி ஷீல்ட் கொடுப்பதுபோல் சித்தரிக்கப்பட்டு, அதானி குழுமத்தின் சிறந்த ஊழியருக்கான வாழ்நாள் விருது மோடிக்கு கொடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மோடியின் அர்ப்பணிப்பு அதானி குழுமத்தை மென்மேலும் வளர செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.