Tamilவிளையாட்டு

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி தேர்தல் அக்டோபர் 22 ஆம் தேதி நடக்கிறது

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்ய லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த முட்டுக்கட்டை போட முயற்சித்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அந்த பதவியில் இருந்து நீக்கி கடந்த 2017-ம் அண்டு ஜனவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தும் வரை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை கவனிக்க நிர்வாக கமிட்டி உறுப்பினர்களையும் கோர்ட்டு பின்னர் அறிவித்தது. கடந்த 2 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக பணிகளை 3 பேர் கொண்ட கமிட்டி கவனித்து வருகிறது.

இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிரான வழக்கில் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்டு இருக்கும் வக்கீல் நரசிம்மாவுடன், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்களான வினோத் ராய், டயானா எடுல்ஜி, ரவி தோட்ஜி ஆகியோர் ஆலோசனை நடத்தி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்துள்ளனர்.

இதன்படி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 22-ந் தேதி நடைபெறும் என்று நிர்வாக கமிட்டி நேற்று அறிவித்தது. மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை செப்டம்பர் 14-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறும் போது, ‘நான் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டேன். எனது பணி இரவு வாட்ச்மேன் போன்றது என்று நான் சொல்லி வந்தேன். ஆனால் இந்த இரவு வாட்ச்மேன் பணி நீண்ட காலம் நீடித்து விட்டது. எங்கள் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதால் மகிழ்ச்சி அளிக்கிறது. லோதா கமிட்டி சிபாரிசுகளை மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். அதில் இருந்த சில பிரச்சினைகளை கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் பல முறை மாநில சங்கத்தினரிடம் பேசி பிரச்சினையை சரி செய்தது மகிழ்ச்சிக்குரியது. புதிதாக தேர்வு செய்யப்படும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை நடத்துவார்கள் என்று நம்புகிறோம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *