இந்தி திணிப்பை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் – ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நாட்டில் பொதுவான மொழியாக இந்தியை கொண்டு வரவேண்டும் என உள்துறை மந்திரி அமித் ஷா கூறியது பற்றியும், அதற்கு தமிழகத்தில் உள்ள கடுமையான எதிர்ப்பு குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ரஜினிகாந்த் அளித்த பதில் வருமாறு:-
எந்த நாடாக இருந்தாலும், பொதுவான மொழி என ஒன்று இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் பொதுவான மொழியை கொண்டு வர முடியாது.
எந்த மொழியையைம் இங்கு திணிக்க முடியாது. முக்கியமாக இந்தி மொழியை திணிக்க நினைத்தால், தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வடஇந்தியாவில் கூட பல மாநிலங்களில் இந்தி திணிப்பை ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.