ஐபிஎல் கிரிக்கெட் 2023 – ஐதராபாத்தை வீழ்த்தி டெல்லி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதியது.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் பில் சால்ட் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் மற்றொரு துவக்க வீரர் வார்னர் 21 ரன்னிலும், அதிரடியாக ஆடிய மார்ஷ் 25 ரன்னும் சேர்த்தனர். சர்பராஸ் கான் 10, அமன் ஹகிம் கான் 4 என விரைவில் விக்கெட்டை இழந்தனர். 62 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன.
அதன்பின் மணீஷ் பாண்டே, அக்சர் பட்டேல் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் தலா 34 ரன்கள் சேர்த்தனர். ரிபால் பட்டேல் 5 ரன், அன்ரிச் நோர்ட்ஜே 2 ரன்களில் ரன் அவுட் ஆக, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.
ஐதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் கைப்பற்றினார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட், நடராஜன் ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக மயாங்க் அகர்வால் 49 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து, ஹெயின்ரிச் க்ளாசன் 31 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 24 ரன்களும், ராகுல் திரிபாதி 15 ரன்களும், ஹாரி ப்ரூக் 7 ரன்களும், அபிஷேக் சர்மா 5 ரன்களும், எய்டன் மர்க்ரம் 3 ரன்களும், மார்கோ ஜான்சன் 2 ரன்களும் எடுத்தனர். இந்த ஆட்டத்தின் முடிவில் ஐதராபாத் அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இதன்மூலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.