கர்நாடகாவில் செருப்பு அணிந்து கோவிலுக்குள் சென்ற 4 இளைஞர்கள் கைது!
கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், பண்ட்வால் அருகே கரிஞ்சா மலையில் அமைந்துள்ள சரிஞ்சேஸ்வரா கோயில் வளாகத்தில் கடந்த மாதம் வாலிபர்கள் நான்கு பேர் காலணிகள் அணிந்தபடி நுழைந்துள்ளனர். அதுமட்டுமன்றி அதனை வீடியோ எடுத்து கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி அன்று சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, மத உணர்வுள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், இந்து அமைப்பினரும் குற்றம்சாட்டப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதேபோல், பண்ட்வாலின் பாஜக எம்எல்ஏ ராஜேஷ் நாய்க் இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதைதொடர்ந்து, மங்களூரு நகரத்தை சேர்ந்த நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் பகவான் சோனாவானே கூறியதாவது:-
புனித வழிபாட்டுத் தலத்துக்குள் காலணிகளை அணிந்து சென்ற புகாரில், புஷர் ரெஹ்மான் (20), இஸ்மாயில் அர்ஹமாஸ் (22), முகமது தானிஷ் (19), முகமது ரஷாத் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வழிபாட்டு தலம் அல்லது புனிதமான ஒரு பொருளை அழித்தல், சேதப்படுத்துதல் அல்லது அசுத்தம் செய்தல், ஒரு வகுப்பினரின் மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வாலிபர்கள் மீது புன்னாலகட்டே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.