கிரிஷ்ணகிரி மாவட்டம் குறித்து பீலா ராஜேஷ் விளக்கம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியை அடுத்துள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த 67 வயது முதியவர் உள்பட 4 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம், புட்டபர்த்தி கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் உழவார பணியில் ஈடுபட்டு காரில் ஊர் திரும்பினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 67 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அம்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் பச்சை மண்டலத்தில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஆரஞ்சு மண்டலமாக மாறியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி இன்னும் பச்சை மண்டலமாகத்தான் திகழ்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பீலா ராஜேஷ் கூறுகையில் ‘‘புட்டபர்த்தியிலிருந்து திரும்பிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் சேலம் சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவர் சேலம் மாவட்ட பாதிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் கிருஷ்ணகிரி இன்னும் பச்சை மண்டலமாகவே திகழ்கிறது. ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத ஒரே மாவட்டம் கிருஷ்ணகிரி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.