கீ- திரைப்பட விமர்சனம்
அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கீ’ எப்படி என்பதை பார்ப்போம்.
கல்லூரி மாணவரான ஜீவா, கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்கள் ஹக்கிங் செய்வதில் கெட்டிக்காரராக இருக்கிறார். பாட்ஷா என்ற வைரஸ் ஒன்றை கண்டுபிடிக்கும் ஜீவா அதை வைத்து பலரது ஸ்மாட்போன்களை ஹக் செய்து, அந்த தகவல்கள் மூலம் விளையாட்டாக பெண்களுடன் பழக முயற்சிக்கிறார். அந்த ரூட்டில் பத்திரிகை நிருபரான அனைகாவுடன் நட்பாகி அவருடன் சுற்றி வருகிறார்.
இதற்கிடையே, சிலரது போனுக்கு மர்ம கால் ஒன்று வர, அதில் பேசுபவர், யாரையாவது கொலை செய்ய சொல்ல, அவர்களும் அந்த போன் குரலுக்கு அடிபணிந்து கொலை செய்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் சென்னையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, அனைகா அந்த சம்பவங்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் குறித்து பல தகவல்களை சேகரிப்பதோடு, அந்த போன்கால்களை செய்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க ஜீவாவிடம் உதவி கேட்க, அவரும் தனது ஹக்கிங் தொழில்நுட்பம் மூலம் அந்த மர்ம போன்கால்கள் வரும் இடத்தை கண்டுபிடித்துவிடுகிறார். ஆனால், அங்கு அனைகா சென்று பார்க்கும் போது அவர்கள் இடத்தை காலி செய்துவிடுகிறார்கள்.
இதற்கிடையே, நிக்கி கல்ராணியை பார்த்ததும் காதல் கொள்ளும் ஜீவா, அவர் பின்னாடி சுற்ற திடீரென்று அனைகாவுக்கு உதவ மறுப்பதோடு, ஹக்கிங் செய்வதையும் விட்டுவிடுகிறார். இந்த நிலையில், மர்ம கும்பல் தங்களது தொழில்நுட்பம் மூலம் அனைகாவை கொலை செய்துவிடுவதோடு, ஜீவாவையும் கொலை செய்ய முயற்சிக்க, அப்போது தான் அவருக்கு பொறி தட்டுகிறது. உடனே அனைகாவை சந்திக்க செல்லும் ஜீவாவுக்கு அவர் இறந்த செய்தி அதிர்ச்சியை கொடுக்கிறது. உடனே, அனைகா பற்றியும், அவர் சொன்ன அந்த மர்ம போன் கால் பற்றியும் தெரிந்துக் கொள்ள களத்தில் இறங்கும் ஜீவாவுக்கு பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவர, அந்த மர்ம கும்பலை களை எடுக்க களத்தில் இறங்கும் ஜீவா, அதை எப்படி செய்து முடிக்கிறார், அவர்கள் எதற்காக பலரை மிரட்டி கொலை செய்கிறார்கள், என்பது தான் ‘கீ’ படத்தின் கதை.
உள்ளங்கையில் உலகத்தை கொண்டு வரும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இண்டர்நெட் தொழில்நுட்பத்தில் எந்த அளவுக்கு வசதிகள் இருக்கிறதோ அதை விட பல மடங்கு ஆபத்தும் இருக்கிறது என்பதை தான் இயக்குநர் காளீஸ் இப்படத்தின் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அது ஒரு சிலருக்கு மட்டுமே புரியும் வகையில் தான் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
கல்லூரி மாணவர்கள், படிக்காதவர்கள், கூலி தொழிலாளிகள், அரசு ஊழியர்கள், பணக்காரர்கள் மற்றும் வசதி இல்லாதவர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்கள் கையில் ஸ்மார்ட்போனும் இருக்கிறது, அதில் இருக்கும் ஆப்களை அவர்கள் பயன்படுத்தவும் கற்றுக்கொள்கிறார்கள். அந்த அளவுக்கு தொழில்நுட்பம் ரொம்ப எளிமையாகிவிட்ட நிலையில், அதன் ஆபத்துக்களை சொல்லியிருக்கும் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் காளீஸ் இடியாப்ப சிக்கல் போல குழப்பத்தோடு சொல்லியிருப்பதோடு, சாதாரண மக்களுக்கு புரியாதபடியும் சொல்லியிருக்கிறார்.
ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள், என்று மட்டுமே சொல்லலாம். மற்றபடி அவர்கள் பற்றி குறிப்பிட்டு சொல்ல அவர்களது கதாபாத்திரம் மனதில் நிற்கும்படி இல்லை. ஹீரோ, ஹீரோயின் கதாபாத்திரத்திற்கே இந்த நிலை என்றால், மற்ற கதாபாத்திரங்கள் பற்றி கேட்கவா வேண்டும், சுத்தம்.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே ஏதோ படத்தில் இருக்க வேண்டுமே என்ற நிலையிலேயே இருக்கிறது. ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவுக்கும் அதே நிலை தான்.
திடீரென்று ஒரு போன் கால் வர, அதை எடுத்து பேசுபவர்கள் மர்ம குரலுக்கு பயந்து, உடனே அவர்கள் சொல்பவர்களை விபத்து ஏற்படுத்தி கொலை செய்கிறார்கள். ஆனால், அவர்கள் கொலையால் அந்த மர்ம கும்பலுக்கு என்ன லாபம், அவர்களுக்கு பயப்படுபவர்களை எதை வைத்து மிரட்டுகிறார்கள், என்பதை ஒரே ஒரு காட்சியின் மூலம் இயக்குநர் சொல்லியிருந்தாலும், அதை அழுத்தமாகவோ அல்லது புரியும்படியும் சொல்லாதது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
படம் தொடங்கிய 20 நிமிடங்களில் ஹீரோ கதைக்குள் பயணிக்க தொடங்கினால் தான் படம் பார்க்கும் ரசிகர்களும் படத்துடன் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். அதுவும் இதுபோன்ற ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றால், அடுத்தது என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்போடு சில லாஜிக்கான விஷயங்களும் இருந்தால் தான் ரசிகர்களின் கவனம் சிதராது. ஆனால், இயக்குநர் காளீஸ், சீரியஸான இடத்தில், குடும்ப செண்டிமெண்ட், காதல் பிரிவு, காமெடி என்று திரைக்கதையை வேறு பாதையில் பயணிக்க வைப்பதோடு, ஹீரோ கதாபாத்திரத்தை இடைவேளை முடிந்த பிறகு கூட கதைக்குள் கொண்டு செல்லாமல், கண் மூடித்தனமாக படத்தை நகர்த்தி செல்கிறார்.
மொத்தத்தில், ’கீ’ மூலம் நல்ல விஷயத்தை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர், அதை எப்படி சொல்ல வேண்டும், என்பது தெரியாமல் தவியோ தவித்திருப்பவர், வில்லன் போன்காலுக்கு பயப்படும் மனிதர்களைப் போல, படம் பார்ப்பவர்களிடமும் பெரும் பயத்தை ஏற்படுத்தி விடுகிறார்.
-ஜெ.சுகுமார்