குரூப் 2 தேர்விலும் மோசடி – 4 அரசு அதிகாரிகள் கைதாகிறார்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4, 2017-ம் ஆண்டு நடைபெற்ற குருப்-2ஏ மற்றும் 2016-ம் ஆண்டு நடந்த கிராம நிர்வாக அதிகாரி தேர்வுகளில் மோசடி நடைபெற்றதை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்தினர் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக சுமார் 50 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி. ஊழியரான ஓம்காந்தன், முகப்பேரைச் சேர்ந்த தரகர் ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
2017-ம் ஆண்டு குரூப்-2ஏ தேர்வை எழுதி அரசு பணியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உள்பட பலரும் சிக்கினார்கள்.
இவர்கள் அனைவரும் சென்னை தலைமை செயலகம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்து வந்தவர்கள் ஆவர்.
இந்த மூன்று தேர்வு முறைகேடுகளிலும் கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 4-வதாக குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஓம்காந்தன், ஜெயக்குமார் இருவரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு மையத்தை தேர்வு செய்து மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
நாகர்கோவில் மையத்தில் தேர்வு எழுதிய 4 பேர் முறைகேடாக தேர்ச்சி பெற்று சென்னை மற்றும் மதுரையில் அரசு அதிகாரிகளாக பணியாற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பேரையும் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஓம்காந்தன், ஜெயக்குமார் இருவரையும் போலீசார் அடுத்தடுத்து காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். தற்போதும் இருவரும் போலீஸ் காவலில்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் புதிதாக குரூப்-2 தேர்விலும் மோசடி நடைபெற்று இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.