Tamilசெய்திகள்

கூட்டணிகாக அதிமுக அலையவில்லை – அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தாம்பரம்-நெல்லை இடையே இயக்கப்பட்ட அந்தியோதயா ரெயில் நாகர்கோவில் வரையிலும் நீட்டிக்கப்பட்டது. இந்த ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த விழாவில் மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் கோரிக்கை வைத்தேன். அவர், விழா மேடையிலேயே இதற்கான உத்தரவை வழங்கினார். மேலும் தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பழைய பெட்டிகளுக்கு பதிலாக புதிய பெட்டிகளை இணைக்க விரைவில் ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

கோவில்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.2 கோடியே 60 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டு உள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புகழாலும், செல்வாக்காலும், நலத்திட்டங்களாலும்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 134 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் 18 பேர் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்ததால், தற்போது பதவி இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர்.

கடந்த தேர்தலில் ஒரு தொகுதியிலும் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. ஏனெனில் ஜெயலலிதா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் இருந்தே ஒதுக்கி வைத்து இருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை காப்பாற்றுவதற்காக யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. கூட்டணிக்காக நாங்கள் அலையவும் இல்லை. மக்களை காப்பாற்றும் நிலையில்தான் அ.தி.மு.க. அரசு உள்ளது. டி.டி.வி.தினகரன் போன்றவர்களையும்கூட காப்பாற்றும் நிலையில்தான் அ.தி.மு.க. அரசு உள்ளது.

வருகிற 2021-ம் ஆண்டுக்குள் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்பட்டு பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி அவர், கடந்த 16-5-2016 அன்று 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார். அவரது மறைவுக்கு பிறகு, கடந்த 16-2-2017 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார்.

இதுவரையிலும் 1,000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளன. தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டும் அல்லாமல், மேலும் பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி சாதனை புரிந்தவர் ஜெயலலிதா. அவரது வழியில் அ.தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், எத்தனை மேல்முறையீட்டுக்கு சென்றாலும் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு தான் வரும். ஏனெனில் அ.தி.மு.க.வின் பெயரும், கட்சி கொடியும் எங்களுடன் இருப்பதோடு மட்டும் அல்லாமல், அனைத்து தொண்டர்களும், நிர்வாகிகளும் இங்குதான் உள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை. அ.தி.மு.க. ஆட்சியின்போதுதான் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து விடுவார்கள் என்று சிலர் கூறுவதற்கு பதில் சொல்வதை அபத்தமாக கருதுகிறேன்.

கடந்த 1996-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு தொழில் துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோதுதான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு 245 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அடுத்த முறை பத்திரிகையாளர்களை சந்திக்கின்றபோதோ அல்லது பொதுக்கூட்டத்திலோ இதனை காண்பிக்க தயாராக இருக்கிறேன். இதற்கு மறுப்பு தெரிவிக்க கனிமொழி எம்.பி. தயாராக உள்ளாரா?.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *