ஜப்பானை தாக்கிய குரோசா புயல்!
ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹோன்சு தீவில் ஹிரோஷிமா நகருக்கு அருகே உள்ள குரோ நகரில் நேற்று சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலுக்கு ‘குரோசா’ என பெயரிடப்பட்டு உள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு இந்த புயல் தாக்கியது. மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் காற்று சுழன்றடித்தது. இடைவிடாத மழையும் பெய்தது.
பலத்த காற்றில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பந்தாடப்பட்டன.
இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.
சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதற்கிடையில் புயல், மழை காரணமாக ஹிரோஷிமா மற்றும் அதனை சுற்றி உள்ள நகரங்களில் சுமார் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் ஷிகோகு மற்றும் ஜப்பானின் பிற பகுதிகளை இணைக்கும் படகு சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. புல்லட் ரெயில்கள் உள்பட அனைத்து வகை ரெயில் சேவையும் நிறுத்திவைக்கப்பட்டதோடு, நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன.
ஜப்பானில் தற்போது விடுமுறை காலம் என்பதால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லவிருந்த பயணிகள் ‘குரோசா’ புயலால் ஏற்பட்ட பயண குழப்பத்தால் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதற்கிடையில் புயல் கரையை கடக்கும்போது, பலத்த காற்றுடன் ஒரேநாளில் மட்டும் சுமார், 1000 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்யலாம் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே நீர் நிலைகள் அருகே வசிக்கும் சுமார் 6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். புயல், மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக் கான வீடுகள் இருளில் மூழ்கின.
மேலும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கிப்போய் உள்ளது. புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுரை 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.