Tamilவிளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – இங்கிலாந்து வெற்றி

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 269 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 223 ரன்களும் சேர்த்தன.

46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. பென் ஸ்டோக்ஸ் 47 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 72 ரன்கள் விளாச, சிப்லி ஆட்டமிழக்காமல் 133 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் குவித்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு 438 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடினமான இலக்குடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. போட்டியை எப்படியாவது டிராவில் முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தென்ஆப்பிரிக்காவின் பீட்டர் மாலன், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் இங்கிலாந்தின் பந்து வீச்சை சோதிக்கும் அளவிற்கு பொறுமையாக விளையாடினர். 22.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்ட தென்ஆப்பிரிக்கா, 40.6 ஓவரில்தான் 100 ரன்னைத் தொட்டது. டீன் எல்கர் 78 பந்தில் 34 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பீட்டர் மாலன் உடன் ஹம்சா ஜோடி சேர்ந்தார். இவரும் முடிந்த அளவிற்கு பந்துகளை எதிர்கொண்டார்.

பீட்டர் மாலன் 144 பந்தில் அரைசதம் அடித்தார். நேற்று முன் தினம் 4-வது நாள் ஆட்டம் முடிவதற்கு முந்தைய ஓவரில் ஹம்சா 59 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து நைட் வாட்ச்மேனாக மகாராஜ் களம் இறங்கினார். நேற்று முன் தினம் 4-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 56 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. பீட்டர் மாலன் 63 ரன்னுடனும், மகாராஜ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. மகாராஜ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டு பிளிசிஸ் 19 ரன்னில் வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு மாலன் உடன் வான் டெர் துஸ்சென் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகப்பெரிய அளவில் தடுப்பாட்டத்தை கடைபிடித்தனர். ஆனால் 288 பந்துகளை சந்தித்து 84 ரன்கள் எடுத்த நிலையில் பீட்டர் மாலன் ஆட்டமிழந்தார்.

அதன்பின் தென்ஆப்பிரிக்காவின் பாதுகாப்பு ஆட்டத்தில் தடை ஏற்பட்டது. துஸ்சென் 140 பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். டி காக் 107 பந்தில் 50 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

பென் ஸ்டோக்ஸ் கடைசி மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 137.4 ஓவர்களை எதிர்கொண்டு 248 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் 189 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 565 நிமிடங்கள் போராடியது.

தென்ஆப்பிரிக்கா அணியில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் ஜேம்ஸ் ஆண்டர்சன், டென்லி தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் 16-ந்தேதி தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *