தெலுங்கானா சட்டசபை தேர்தல் – வேட்புமனு தாக்கல் தொடங்கியது
119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கியிருக்கும் நிலையில், வருகிற 10-ந் தேதி வரை வேலை நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நவம்பா் 13-ந் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் நவம்பா் 15-ந் தேதி. முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ள தெலுங்கானாவில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 3.17 கோடி. இதில் பெண்கள் 1.58 கோடி போ்.
மிசோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இம்மாதம் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எஞ்சிய 4 மாநிலங்களில் ஏற்கனவே தோ்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்ட நிலையில், தெலுங்கானாவிலும் நடைமுறைகள் தொடங்கி இருப்பதால் 5 மாநில தோ்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் மட்டும் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. மிசோரமின் 40 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கும் வருகிற 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகள் மற்றும் சத்தீஸ்கரில் 2-வது கட்டமாக 70 தொகுதிகளில் 17-ந்தேதியும், ராஜஸ்தானின் 200 தொகுதிகளுக்கு 25-ந்தேதியும், தெலுங்கானாவில் 30-ந்தேதியும் தோ்தல் நடைபெறவுள்ளது. 5 மாநிலங்களிலும் டிசம்பா் 3-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தோ்தலுக்கு முன்னோட்டமாக இத்தோ்தல்கள் கருதப்படுகின்றன. மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பா.ஜ.க. என பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன. தெலுங்கானாவில் ஆளும் பிஆா்எஸ், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
5 மாநிலங்களிலும் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை சுமாா் 16 கோடி. இதில் ஆண்கள் 8.2 கோடி போ், பெண்கள் 7.8 கோடி போ். இவா்களில் 60.2 லட்சம் போ் முதல்முறை வாக்காளா்கள். மொத்தம் 1.77 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் சுமாா் ஒரு லட்சம் மையங்களில் இணைய ஒளிபரப்பு வசதி மேற்கொள்ளப்படும். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் முழுமையாக பெண்களால் நிா்வகிக்கப்பட உள்ளன.