Tamilசெய்திகள்

நிலவுக்கு மிக அருகில் சென்ற விக்ரம் லேண்டர்!

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம், புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக சுற்றி வந்த நிலையில், அதன் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, நிலவை நோக்கி திசை மாற்றப்பட்டது.

நிலவின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்த சந்திரயான்-2 விண்கலம், நிலவை நெருங்குவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், நிலவை சுற்றி வரும் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவின் பரப்பில் இருந்து குறைந்தபட்சம் 119 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 127 கி.மீ. தொலைவிலும் நிலை நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் நேற்று முன்தினம் முக்கிய நிகழ்வாக சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகள் தரைதளத்தில் இருந்து கொண்டே சந்திரயானில் இருந்து லேண்டரை பிரித்தனர்.

தனியாகப் பிரிந்த லேண்டர், நிலவை அதன் சுற்றுவட்டப்பதையில் சுற்றத் தொடங்கியது. இதையடுத்து லேண்டரை நிலவின் அருகில் கொண்டு செல்வதற்காக அதன் நீள்வட்ட சுற்றுப்பாதை நேற்று மேலும் குறைக்கப்பட்டது. அப்போது, நிலவின் நீள்வட்டப்பாதையில் குறைந்தபட்சமாக 104 கிமீ தொலைவிலும், அதிகபட்சமாக 128 கிமீ தொலைவிலும் லேண்டர் சுற்றத் தொடங்கியது.

இந்நிலையில், இன்று அதிகாலை லேண்டரின் சுற்றுவட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டது. இதற்காக இன்று அதிகாலை 3.42 மணியளவில் திட்டமிட்டபடி, அதன் என்ஜின் 9 வினாடிகள் இயக்கப்பட்டது. இதனால், லேண்டர் நிலவை மேலும் நெருங்கி, குறைந்தபட்சம் 35 கி.மீ., அதிகபட்சம் 101 கிமீ என்ற நீள்வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கியது. அதேசமயம் ஆர்பிட்டர் குறைந்தபட்சம் 96 கிமீ, அதிகபட்சம் 125கிமீ என்ற நீள்வட்டப்பாதையில் நிலவை சுற்றி வருகிறது.

இன்றைய பணி வெற்றிகரமாக அமைந்ததால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். லேண்டரும் ஆர்பிட்டரும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வரும் 7-ம் தேதி அதிகாலை 1.30 மணியில் இருந்து 2.30 மணிக்குள் லேண்டரை நிலவுக்கு மிகவும் அருகாமையில் கொண்டு சென்று, தென்துருவத்தில் மெதுவாக தரை இறக்கப்படும். நிலவில் லேண்டர் தரையிறங்கியதும் அதில் இருந்து 6 சக்கரங்கள் கொண்ட ரோவர் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய உள்ளது.

சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் ஓராண்டு காலம் ஆராய்ச்சிப்பணியில் ஈடுபடும். விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் 14 நாட்கள் ஆராய்ச்சிப்பணியை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *