பாகிஸ்தான், இலங்கை இடையிலான ஒரு நாள் போட்டி மழையால் ரத்து!
பாகிஸ்தானில் இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு சுற்றுப் பயணம் செய்தபோது வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். அதன்பின் எந்தவொரு அணியும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தான் செல்லவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தொடர் முயற்சியால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட சம்மதம் தெரிவித்தது.
அதன்படி முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சி சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இது புதிய வரலாறு என ஒவ்வொரு வீரர்களும் மகிழ்ச்சியுடன் கூறி வந்தனர்.
போட்டி சரியான 3 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென கனமழை பெய்தது. மழை நின்றாலும் மைதானத்தை உடனடியாக சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது.
பல தடைகளை கடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் மலருகின்ற நிலையில், மழை அதற்கு தடைபோட்டுள்ளது. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 29-ந்தேதி நடக்கிறது.