Tamilவிளையாட்டு

பாராளுமன்ற தேர்தல் எதிரொலி – 2ம் கட்ட ஐபிஎல் போட்டிகள் துபாய்க்கு மாற்றமா?

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது. வருகிற 22-ந் தேதி முதல் ஏப்ரல் 7-ந் தேதி வரை 17 நாட்களுக்கான 21 போட்டிகள் விவரம் வெளியாகி இருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22-ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ஏப்ரல் 7-ந் தேதி லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தது. பாராளுமன்ற தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படுகிறது. இதனால் 2-வது கட்ட ஐ.பி.எல். அட்டவணையை கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். 2-வது கட்ட போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு மாற்ற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் சில நிர்வாகிகள் துபாய் சென்றுள்ளனர். 2-வது கட்ட போட்டிகளை இந்தியாவில் இருந்து துபாய்க்கு மாற்றலாமா? என்பது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவிலும், 2014-ல் முதல் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டது. 2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக ஐ.பி.எல். முழுமையாகவும் 2021-ல் 2-வது கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடைபெற்றது.