Tamilவிளையாட்டு

போட்டி முடிவை மாற்றுவதற்கு ஏற்றவாறு பந்து வீசினேன் – யுஸ்வேந்திர சாஹல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு அந்த அணி வீரர் யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

17வது ஓவரின்போது சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், கம்மின்ஸ் , மாவி ஆகியோரது விக்கெட்களை அடுத்தடுத்து ஹாட்ரிக் முறையில் சாஹல்
வீழ்த்தியது போட்டி ராஜஸ்தான் அணிக்கு சாதமாக மாற காரணமாக அமைந்தது.

இது குறித்து பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சாஹல் கூறியுள்ளதாவது:

போட்டி முடிவை மாற்ற நான் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியிருந்தது. நான் எனது பந்துவீச்சில் கவனம் செலுத்தினேன். எனது பந்து வீச்சு குறித்து பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் பேசினேன்.

எனக்கு கூக்லி நன்றாக வந்து கொண்டிருந்தது. அதை பயன்படுத்தி வெங்கடேஷ் ஐயரை ஸ்டம்பிங் செய்ய வைத்தேன். அது திட்டமிட்டு வீசப்பட்ட பந்தாகும். ஏனெனில் அவர் எனது லெக் பிரேக் பந்து
வீச்சை நன்றாக விளையாடுவார்.

பாட் கம்மின்ஸுக்கு ஒரு கிளாசிக்கல் லெக் பிரேக் பந்து வீச்சை பயன் படுத்தினேன். அவருக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய, கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், 51 பந்துகளில் 85 ரன்களை எடுத்த போதிலும் தன்னால் கடைசி வரை பேட் செய்ய முடியவில்லை என்று
வருத்தம் தெரிவித்தார்.

நாங்கள் தொடக்கத்தில் இருந்தே ரன்-ரேட்டிற்கு ஏற்ப விளையாடினோம். எனினும் எங்களால் அதை கடைசிவரை தொடர முடியவில்லை, ஆனால் இது விளையாட்டின் ஒரு பகுதியாகும் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.