ஸ்டாலினால் தான் தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் – தங்க தமிழ்ச்செல்வன்
அ.ம.மு.க.வின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து அ.ம.மு.க.வில் இருந்து விலகி, இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்தார்.
அங்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதேபோல் அவரது ஆதரவாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
தி.மு.க.வில் இணைந்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், ‘ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி. கலைஞர் இறந்த நாளில் நீதிமன்றம் சென்று மெரினாவில் இடம் பெற்றார்.
திமுகவில் பதவி குறித்து என்னிடம் கேட்கிறார்கள். கேட்டுப் பெறுவது பதவியல்ல. உழைப்பை பார்த்து கொடுப்பது. என் உழைப்பை பார்த்து கொடுப்பார்கள் என நம்புகிறேன்.
அதிமுகவில் இருந்த பலரும் திமுக வந்த பின், அவர்களுக்கு திமுக நல்லதே செய்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என்பதையே தேர்தல் முடிவும் சொன்னது. அதை ஏற்று, நான் திமுகவில் இணைந்துள்ளேன்’ என கூறினார்.