Tamilசெய்திகள்

அதிமுக-வின் சட்டங்களை யாராலும் மாற்ற முடியாது – சசிகலா பேச்சு

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கோர்ட்டை நாடி வருகிறார்கள்.

பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ளதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் பொதுக்குழு நடத்துவதற்கு தடையில்லை என்று அறிவித்துள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதற்கிடையே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அ.தி.மு.க. தொண்டர்கள் என்பக்கம்தான் உள்ளனர் என்று கருத்து தெரிவித்துள்ளார். எனவே அவர் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சசிகலா தொண்டர்களை சந்திக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், திண்டிவனத்தில் தொடங்கிய பயணத்தை மரக்காணம் பகுதியில் முடித்தார். அப்போது சசிகலா தொண்டர்களை சந்தித்தார். சசிகலாவின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது:-

அ.தி.மு.க.வில் ஒரு சிலரின் சுயநலத்தால் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஏதாவது சூழ்ச்சிகளை செய்து அவரவர்கள் உயர்பதவியில் நீடிப்பதற்காக அடிமட்ட தொண்டர்கள் தலைமைக்கு, வருவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்தவிதத்தில் நியாயம்.

இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம். ஒரு சிலரின் அரசியல் லாபத்திற்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? உங்களது சுய விருப்பம், வெறுப்புகளுக்காக இரட்டை இலை சின்னத்தை இதுபோன்று முடக்குவதற்கு யார் முதலில் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? சொந்த வீட்டிற்கே சூனியம் வைத்து விட்டீர்களே.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உங்களை மன்னிப்பார்களா? உங்களை உருவாக்கிய இயக்கத்திற்கு இருபெரும் தலைவர்களுக்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா? ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி அ.தி.மு.க. சட்டதிட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அதே போன்று எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்டதிட்டங்களை திருத்தம் செய்வதை எந்த அ.தி.மு.க. தொண்டர்களும் மனப்பூர்வமாக விரும்பவில்லை.

இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டு அனைவரும் ஒன்றிணைத்தால் இது இரு பெறும் தலைவர்களுக்கு நாம் காட்டும் மிகப்பெரிய நன்றிக்கடனாகும். தி.மு.க.வினர் அ.தி.மு.க. இயக்கத்தைப் பார்த்து பொறாமைப்பட்ட காலங்கள் கடந்து தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை பார்த்து ஆனந்தத்தோடு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள், ஒன்றை மட்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வினரின் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது.

அவர்கள் ஊதும் மகுடிக்கு ஒரு சிலர் வேண்டுமானால் மயங்கலாம். ஆனால் எதற்கும் மயங்காத எண்ணில் அடங்கா தொண்டர்களை கொண்டது அ.தி.மு.க. இயக்கம். தி.மு.க.வினருக்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது என்று தான் நான் மிகவும் பொறுமையாக இருக்கிறேன்.

அனைவருக்கும் வலியுறுத்தி ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் எண்ணம் ஈடேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.