Tamilசெய்திகள்

அரசியல் சட்டத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார் – அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலகவேண்டும் என முதல்வருக்கு கவர்னர் முன்னதாக கடிதம் எழுதியிருந்தார். ஒரு அமைச்சர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதனால் மட்டுமே அவர் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.க. அமைச்சர்கள் 33 பேர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் 2 துறைகளை 2 அமைச்சர்களுக்கு மாற்றக்கோரி பரிந்துரைத்த தமிழக அரசின் கடிதத்தை கவர்னர் ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். கவர்னர் அனுப்பிய கடிதத்திற்கு பதிலாக அதே கோரிக்கையுடன் மற்றொரு கடிதத்தை அனுப்பியுள்ளோம். அமைச்சரை முழுமையாக நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது.

துறை மாற்றத்திற்கு கவர்னர் ஒப்புதல் பெற அவசியமில்லை. மரபு கருதி கடிதம் அனுப்பப்பட்டது. அமைச்சரவையை மாற்றுகிறோம் என்று காரணங்களை குறிப்பிட்டு கடிதம் அனுப்பினாலும், அதனை கவர்னர் திருப்பி அனுப்புகிறார்.

அமைச்சர்களின் துறைகளை ஏன் முதலமைச்சர் மாற்றுகிறார் என காரணம் கேட்க கவர்னருக்கு அதிகாரமும், உரிமையும் இல்லை. கவர்னர் பா.ஜ.க.வின் ஏஜெண்டாகவும், தமிழக அரசின் அதிகாரங்களில் அதிகம் தலையிடுபவராகவும் இருக்கிறார்.

அரசியல் சட்டத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார் என தெரிவித்தார்.