Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி சிறப்பானதாகும் – விராட் கோலி மகிழ்ச்சி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 316 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி தோல்வியை சந்தித்தது. 117 ரன்கள் எடுத்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘நாங்கள் கடைசியாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை இழந்தோம். எனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் கூடுதல் உத்வேகத்துடன் களம் கண்டோம். இது ஒரு சிறப்பான வெற்றியாகும். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அருமையாக செயல்பட்டார்கள். நாங்கள் தொழில்முறை ஆட்ட நேர்த்தியுடன் செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

நமது வீரர்கள் துல்லியமாக பந்து வீசி அடித்து ஆட முடியாத அளவுக்கு எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். நமது வீரர்கள் அனுபவம் மிக்கவர்கள். அவர்களுக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்லை. பந்து ஸ்விங் ஆகும் சூழ்நிலை இருந்தால் தான் முகமது ஷமியை களம் இறக்க முடியும். புவனேஷ்வர்குமார் புதிய பந்தில் மட்டுமின்றி பழைய பந்திலும் நன்றாக பந்து வீசுவார். புவனேஷ்வர்குமார் ஒரே ஓவரில் ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ் விக்கெட்டை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *