Tamilசெய்திகள்

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவை சந்திக்கும் நிதிஷ்குமார்

அடுத்த ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டு உள்ளார்.

இதற்காக துணை முதல்-மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவுடன் சமீபத்தில் டெல்லி சென்று இருந்தார். அங்கு அவர் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் கொல்கத்தா சென்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மற்றும் லக்னோ சென்று சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்தார்.

மம்தா, அகிலேசை தொடர்ந்து ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவ் ஆகியோரை நிதிஷ்குமார் விரைவில் சந்திக்கிறார். இதை ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். அவர் கூறும்போது, “ஒடிசா மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரிகளை நிதிஷ் குமார் விரைவில் சந்திக்கிறார்.

தேதி இன்னும் முடிவாகவில்லை” என்றார். நவீன் பட்நாயக் பா.ஜனதா, காங்கிரஸ் கூட்டணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனால் பாராளுமன்றத்தில் முக்கிய மசோதா தாக்கல் ஆகும் போது அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். சந்திரசேகரராவ் பா.ஜனதாவை முழுவதும் எதிர்த்து வருகிறார்.