Tamilசெய்திகள்

மேற்கு வங்கத்தில் 4,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசம்!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் அலிப்பூர் பகுதியில் உள்ள அரசு அலுவலகக் கட்டிடத்தில் சமீபத்தில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இந்த கட்டிடத்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அனைத்து தளங்களுக்கும் வேகமாக பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அலுவலக கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டிருந்த 4,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் சிக்கி நாசமாகின.

இந்த தீ விபத்து குறித்து மேற்கு வங்க மாநில தீயணைப்புத் துறை அமைச்சர் கெளசிக் சௌத்ரி கூறுகையில், ” இந்த தீ விபத்தில் கட்டிடத்தில் குறிப்பிட்ட தளங்களிலி மட்டும் தீ பரவியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம் என்றார். தீ விபத்து குறித்து சிறப்பு விசாரணைக்குழுவை (எஸ்ஐடி) கொல்கத்தா காவல்துறை நியமித்துள்ளது. தீ விபத்து நடந்த இடத்தில், மின்னணு இயந்திரங்கள் தீப்பிடித்ததில் யாருக்கும் சம்பந்தம் உள்ளதா என்று குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்திற்கு ஆளும் பாஜக மீது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. காஸ்பா, ஜாதவ்பூர், பெஹாலா கிழக்கு, பெஹாலா மேற்கு உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் தீயில் நாசமாகியுள்ளன. இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் திரிணாமுல் குற்றம் சாட்டியுள்ளது.