Tamilசெய்திகள்

பா.ஜ.க-வுக்கு ஜால்ரா அடிக்கும் அரசு தான் எடப்பாடி அரசு – தங்க தமிழ்ச்செல்வன் தாக்கு

மதுரை வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் இளைஞரணி சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இளைஞரணி செயலாளர் பிரதீப்ராம்குமார் தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், வடக்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் ஜெயபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவுக்கு பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்த தகுதி படைத்தவர் சசிகலா. அவரது முயற்சியால்தான் தற்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்திடம் சேர்ந்துகொண்டு கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார்.

மத்திய அரசின் அடிமைகளாக இருந்து கொண்டு தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் பா.ஜனதாவுக்கு ஜால்ரா அடிக்கும் அரசாக எடப்பாடி அரசு திகழ்ந்து வருகிறது. இந்த ஆட்சி மீது அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கோபம் கொண்டுள்ளனர்.

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. கமி‌ஷன் அடிக்கும் திட்டங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதற்கு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் தமிழக மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே தீரவேண்டும். அ.தி.மு.க.வில் உள்ள 1½ கோடி தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். ஆனால் சிலர் பதவி சுகத்தில் இருந்து கொண்டு எங்களை விமர்சிக்கிறார்கள்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் தினகரன் அறிவிக்கும் வேட்பாளர் அமோக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இடைத்தேர்தலுக்கு பிறகு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் அணி காணாமல் போய்விடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *