முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்!
சட்டமன்ற தேர்தலுக்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். மேலும், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். ஒரு மாத காலம் ஓய்வின்றி தேர்தல் களப்பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டார்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்கிறார். அங்கு ஒரு வார காலம் குடும்பத்தினருடன் தங்கி அவர் ஓய்வு எடுக்க உள்ளார்.
