Tamilதிரை விமர்சனம்

’காயம்குளம் கொச்சின்னி’- திரைப்பட விமர்சனம்

‘பிரேமம்’ படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நிவின் பாலி நடிப்பில் உருவாகியிருக்கும் வரலாற்றுப் படம் தான் ‘காயம்குளம் கொச்சின்னி’.

கேரளாவில் தலித் சமூகத்திற்காகவும், செல்வந்தர்களின் சுரண்டலுக்கு எதிராகவும் போராடிய காயம்குளம் கொச்சின்னி என்பவரின் வாழ்க்கை படமாக உருவாகியிருக்கும் இப்படம் மலையாளத் திரைப்படம் என்றாலும், இப்படத்தின் கதைக்களமும், கொச்சின்னி எதிர்கொண்ட துரோகம், கடந்து வந்த பாதை என அனைத்தும், மொழியை தாண்டி, அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகும்.

ஏழை இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த கொச்சின்னி, இளம் வயதிலேயே வறுமையின் கொடுமையை அனுபவிக்கிறார். பசிக்காக சிறிதளவு அரிசி திருடி மாட்டிக்கொண்டு, நிர்வானமாக அடிவாங்கும் தனது தந்தையின் நிலையை பார்க்கும் கொச்சின்னியை, அவரது அம்மா, ”எங்களுடன் இருந்தால் பசியால் செத்துடுவ, அதனால் எங்கயாவது போய் பொயச்சுக்க”, என்று கூறி அனுப்ப, பிராமணர் ஒருவரிடம் பசியாறும் கொச்சின்னி, அவர் மூலமாக எம்.எஸ்.பாஸ்கரின் மளிகை கடையில் வேலையும் செய்து வர, ஒரு முறை படகில் செல்லும் போது ஆற்றில் தவறி விழும் தனது முதலாளி எம்.எஸ்.பாஸ்கரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் போது, தண்ணீர்க்கு அடியில் தங்க நகைகளோடு மூழ்கிய படகு ஒன்று இருப்பதை பார்க்கிறார். இதை பிராமண செல்வந்தர்களிடம் கூற, அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு தெரியாமல் அந்த தங்கத்தை தங்கள் வசப்படுத்திக் கொள்ள முடிவு செய்வதோடு, அந்த தங்கத்தை எடுத்துக் கொடுக்கும் பணியை கொச்சின்னியிடும் கொடுக்கிறார்கள்.

அதே சமயம், தங்கத்தை எடுத்துக் கொடுக்க சன்மாணமாக எதை கேட்டாலும் செய்வதாக அவர்கள் கொச்சின்னியிடம் கூற, அதற்கு, தான் வளரும் இஸ்லாமிய குடும்பத்தில் உள்ள பெண்ணின் திருமணத்திற்காக சில தங்க நாணயங்களை கேட்கும் கொச்சின்னி, தலித் மக்களுக்கு ஒருவேளை விருந்து வைக்க வேண்டும் என்பதோடு, தான் காதலிக்கும் இந்து பெண்ணான பிரியா ஆனந்தை திருமணம் செய்துகொள்ள வேண்டும், என்றும் கேட்கிறார். கொச்சின்னியின் இந்த மூன்று கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் பிராமாண செல்வந்தர்கள், தங்க நகைகள் தங்களது கைக்கு வந்ததும், கொச்சின்னி மீது திருட்டு பழி சுமத்தி அவருக்கு சாட்டையடி கொடுத்து, மூன்று நாட்கள் உணவு, தண்ணீர் இன்றி தலைகீழாக தொங்க விடுகிறார்கள். இப்படி தவறே செய்யாமல், துரோகம் இழைக்கப்பட்டு தண்டனைக்கு ஆளான சாதாரண மனிதனாக இருந்த கொச்சின்னி, தனக்கு துரோகம் இழைத்தவர்களை துரத்தி துரத்தி அடிப்பதோடு, இருப்பவர்களிடம் இருந்து எடுத்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் ‘காயம்குளம்’ கொச்சின்னியாக எப்படி உருவாகிறார், என்பது தான் படத்தின் மீதிக்கதை.

1830 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் வாழ்ந்த காயம்குளம் கொச்சின்னி இப்படி தான் இருந்திருப்பாரோ, என்று நாம் எண்ணும் அளவுக்கு நடிப்பால் நம்மை கவரும் நிவின் பாலி, ஆரம்பத்தில் ரொம்பவே சாதுவாண கொச்சின்னியாக வலம் வருபவர், காயம்குளம் கொச்சின்னியாக உருவெடுத்த பிறகு தனது தோற்றத்தில் மட்டும் அல்லாமல் நடிப்பிலும் பெரிய அளவில் மாற்றத்தை காண்பித்திருக்கிறார்.

படத்தில் சிறப்பு தோற்றத்தில் வரும் மோகன் லால், சில நிமிடங்கள் வந்தாலும் மிரட்டுகிறார். தனக்கே உரித்தான பாணியில் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

பிரியா ஆனந்த், களரி ஆசிரியராக நடித்திருக்கும் பாபு ஆண்டனி, கேசவன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் சன்னி வேய்ன் என படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

கோபி சுந்தரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் பினோட் பிரதான், நீரவ்ஷா, சுதீர் பால்சானே ஆகியோரது பணியும், கலை இயக்குநரது பணியும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

உண்மை சம்பவம் அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரை திரையில் கொண்டுவரவும், அக்காலக்கட்டத்தை கொண்டுவரவும் படக்குழு பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார்கள் என்பது அத்தனைக் காட்சிகளிலும் தெரிகிறது.

நம்ம ஊரு ‘மலையூர் மம்பட்டியான்’ போல தான் இந்த காயம்குளம் கொச்சின்னியும் என்றாலும், ஆங்கிலேயர் காலத்து கிராமம், அப்போது இருந்த அடக்குமுறை உள்ளிட்டவைகளை இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரோ அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

ஆக்‌ஷன் காட்சிகளும், அட்வென்சர் காட்சிகளும் படத்தில் நிறைந்திருந்தாலும், சில காட்சிகள் திரும்ப திரும்ப வருவது போன்ற உணர்வைக் கொடுப்பதோடு, திரைக்கதை சில இடங்களில் மந்தம் தட்டவும் செய்கிறது. இருப்பினும், அதுபோன்ற சமயங்களில் கொச்சின்னி சூழ்ச்சியில் சிக்கிக்கொள்வதும், பிறகு அதில் இருந்து தப்பிப்பதும் படத்திற்கு சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியின் பிரம்மாண்டமும், அந்த காட்சியை வடிவமைத்த விதமும் பிரமிக்க வைக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘காயம்குளம் கொச்சின்னி’ பிரமிப்பு

-ஜெ.சுகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *