டாஸ்மாக்கில் நேற்று முன் தினம் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை!
தமிழக சட்டமன்றத் தேர்தலை வாக்குப்பதிவை முன்னிட்டு, நேற்று (ஏப்ரல் 21) முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டனர். தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், குடிமகன்கள் முன் கூட்டியே மது பாட்டில்களை வாங்கி வைக்க தொடங்கினர்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று முன் தினம் மட்டும் ரூ.400 கோடிக்கு மது விற்பனையாகி புதிய சாதனைப் படைத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பதிவான 320 கோடி ரூபாய் விற்பனை சாதனையை, இந்த முறை அசால்ட்டாக 80 கோடி ரூபாய் கூடுதலாகப் பெற்று குடிமகன்கள் முறியடித்துள்ளனர்.
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதும் கடைகளுக்கு விடுமுறை என்பதால், அதற்கு முந்தைய நாளான மே 3 ஆம் தேதியும் டாஸ்மாக் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
