Tamilசெய்திகள்

பெல் தொழிற்சாலை தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மகேஷ் பொய்யாமொழி!

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (திமுக) வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெல் (BHEL) பாய்லர் தொழிற்சாலை தொழிலாளர்களிடம் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சுமார் 6,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் பெல் தொழிற்சாலையின் கிழக்கு வாயில் பகுதியில், நேற்று மாலை 4:30 மணி அளவில் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது, காலை நேரப் பணி முடிந்து வெளியே வந்த தொழிலாளர்கள் மற்றும் இரவு நேரப் பணிக்குச் சென்ற தொழிலாளர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி அவர் பேசியதாவது:-

தேர்தல் பிரச்சாரம் என்று வந்துவிட்டாலே, நான் முதலில் தொடங்கும் இடம் இந்த பெல் தொழிற்சாலைதான். ஒவ்வொரு தேர்தலிலும் என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதில் அண்ணன்-தம்பிகளாகிய பெல் தொழிலாளர்களுக்கு முக்கியப் பங்குண்டு.

பெல் பொதுச்செயலாளர் தீபன் அவர்கள் குறிப்பிட்டது போல, ‘9+4’ என்ற அறிவிப்பிற்காகப் போராடி, இன்று ஒவ்வொரு தொழிலாளியின் வைப்பு நிதியிலும் (PF) ரூ. 13,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்குத் திராவிட மாடல் அரசின் தொடர் முயற்சியே காரணம். இதனைத் தமிழக முதல்வரிடம் பலமுறை எடுத்துரைத்து இந்த வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளோம்.

தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், தொழிலாளர்கள் நீங்களும் உங்கள் உறவினர்களும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மனதில் கொண்டு, உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பெல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள 1 முதல் 6 வரையிலான வார்டுகளில் அவர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.